Gnana Boomi

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்

ஞானபூமி இக்கட்டுரையை அன்புடன் தந்தனுப்பிய திரு. ராமபத்ரன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

நம்முடைய மதம் ஹிந்து மதம். இது வைதீக மதம் ஆகும். இதன் பொருள், வேதம்தான் நம் மதத்தின் அடிப்படை என்பதே. வேதம் இந்த உலகம் தோன்றுவதற்கு முன்பிலிருந்தே இருக்கின்றது. மற்ற மதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்டவரால் உருவாக்கப்பட்டது. உதாரணமாக புத்த மதம் புத்தரால் எற்படுத்தப்பட்டது. புத்தர் காலத்துக்கு முன்னால் அந்த மதம் இல்லை. ஆனால். நம் ஹிந்து மதமானது யாராலும் எற்படுத்தப்படவில்லை. காரணம் என்னவென்றால் வேதம் அபெளருஷேயம் (“अपौरुषेयम्”) – யாரும் வேதத்தை உருவாக்கவில்லை. ரிஷிகள் தங்கள் த்யானத்தில் வேத மந்த்ரங்களை உள்ளே தரிசித்து மக்களுக்கு கொடுத்தார்கள். ஆகவேதான் ரிஷிகளை மந்த்ர த்ரஷ்டா (मन्त्र द्रष्टा) அதாவது, “மந்த்ரத்தை பார்த்தவர்கள்” என்று சொல்வார்கள். வேதத்தை யாராலும் அழிக்கவே முடியாது. அவை ஒலி ஒளி அலைகளாக ஆகாயத்தில் எப்போதும் உள்ளன. எனவே தான் ஹிந்து மதத்தை அறிவியல் சார்ந்தது, ஆத்ம அறிவியலாவது என்று கொண்டாடுகிறார்கள்.

வேதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளது. அவை கர்ம காண்டம், உபாசன காண்டம் மற்றும் ஞான காண்டம். வேதத்தின் சிகரம் என்று எடுத்துக்கொண்டால் அது ஞான கண்டம் ஆகும். மற்ற இரண்டு காண்டங்களின் நோக்கமே ஞானத்தை அடைவதுதான். உபனிஷதங்கள் என்று சொல்லப்படும் வேதாந்த்ங்கள் எல்லாம், ஞான காண்டத்திலேயே உள்ளன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற பல்வேறு தத்வங்களை விளக்கிய, ஶ்ரீ சங்கரர், ஶ்ரீ ராமானுஜர், மற்றும் ஶ்ரீ மத்வர் ஆகிய மூவருமே, வேதத்தின் சாரம், உபனிடதங்கள்தான் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் இருந்தார்கள்.

இப்படிப்பட்ட வேதத்தின் சாரத்தை பகவான் ஶ்ரீ க்ருஷ்ண பரமாத்மா மஹாபாரதத்தில் பகவத் கீதையாக கொடுத்தார். இதனை ஶ்ரீ ஆதி சங்கரர் பரம்பரையில் வந்த ஶ்ரீ மதுசூதன சரஸ்வதி, கீதா த்யான ஸ்லோகத்தில் கூறுகிறார்.

“सर्वोपनिष्दो गावो ;दोग्धा गोपाल नन्दन:”

पार्थो वत्स: सुधी: भोक्ता दुग्धम् गीता अम्रुतम् महत्”

இதனுடய பொருள் என்னவென்றால், “எல்லா உபனிஷதங்களும் பசுக்கள். பால் கறக்கும் இடையன் கோபாலன். அர்ஜுனன் கன்று; நல்ல புத்திசாலி; பால் குடிக்க இருக்கின்றது. கீதை, சிறந்த அமுதமயமான பால்.” ஆக, இதில் இருந்து கீதை, உபனிஷதங்களின் சாரம் என்று தெரிகிறது. கண்ணன் கீதையிலே பதினெட்டு அத்யாயங்களில், 721 ஸ்லோகங்களில் வேத ஸாரத்தை பிழிந்து கொடுத்துள்ளார். அதில் மூன்று ஸ்லோகங்கள் மிகவும் முக்கியமானவை: முதலாவது,

“मत्त; परतरम् नान्यत् किन्चिदस्ति धनन्जय!

मयि सर्वम् इदम् प्रोतम् सूत्रे मणिगणाविव !!  (7-7)

இதன் அர்த்தம் என்னவென்றால், “எனக்குமேல் எந்த பரம்பொருளும் இல்லை அர்ஜுனா, இந்த உலகம் முழுவதும் என்னுள் ஒரு கயற்றில் மாலை போல உள்ளன.”

நமக்கு முதல் வாக்யம் முக்யம். அதாவது கண்ணனே பரம்பொருள். கண்ணன் நாராயணின் அவதாரமாதலால், நாராயணே பரம்பொருள் என்று கூறுகிறார். வேதத்திலும், நாரயண அனுவாகத்தில், “नारयण परम्ब्रह्म तत्वम् नारयण: पर:”  என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டாவதாக

“दैवीह्येषा गुणमयी मम माया दुरत्यया!

मामेव ये प्रपध्यन्ते मायाम् एताम् तरन्ति ते !! (7-14).

இதில் கண்ணன் என்ன சொல்கிறார் என்றால், ”இந்த மாயையை கடப்பது மிகவும் கடினம். என் ஒருவனை எவன் சரண் அடைகின்றானோ, அவன் இந்த மாயயை கடக்கிறான்.”

மூன்றவதாக, சரம ஸ்லோகம் என்னும்படியான (கண்ணன் அர்ஜுனனுக்கு கூறிய) கடைசி உபதேசம்).

“सर्व धर्मान् परित्यज्य माम् एकम् शरणम् व्रज!

अहम् त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच:  !!” (18-66)

கண்ணன் உரைப்பது என்னவெனில்,” அர்ஜுனா, நீ எல்லா தர்மங்களயும் விட்டு விட்டு என் ஒருவனை சரண் அடை. நான் உன்னை எல்லா பாவங்களிலிருந்தும் விடுவித்து உனக்கு மோக்ஷம் அளிக்கிறேன் கவலைப்படாதே!”.

இந்த மூன்று ஸ்லோகங்களும், வைணவ சம்ப்ரதாயத்தின் மூன்று அங்கங்களான தத்வம், ஹிதம், புருஷார்த்தம் இவைகளை விளக்குகின்றன.

  1. ஶ்ரீமன் நாரயணே பர தத்வம் (முதல் ஸ்லோகம்)
  2. அவன் ஒருவனை சரணாகதி அடைவதே உய்ய வழி (இரண்டாவது ஸ்லோகத்தின் இரண்டாம் பகுதி மற்றும், மூன்றாவது ஸ்லோகத்தின் முதல் பகுதி).
  3. அடையவேண்டிய லக்ஷியம் மோக்ஷம். அதை கொடுப்பவன் ஶ்ரீமன் நாரயணனே. (மூன்றாவது ஸ்லோகம் இரண்டாவது பகுதி).

வேதம் நம் மதத்தின் மூலமாக இருந்தாலும், அதை அத்யயனம் செய்வதற்கோ அல்லது அதன் அர்த்தத்தை தெரிந்துகொள்ளவோ நியமங்கள் இருக்கின்றன. எப்படி ஒரு அறிவியல் பரிசோதனைக்குத் தேவையான உபகரணங்கள், சீதோஷணம் இன்னபிற தேவைகள் எல்லாம் அவசியமோ அது போல. வேதங்களை எல்லாரும் அறிந்துகொள்ள இயலாது. ஆனால் நம்மைப்போன்ற சாமான்ய மக்களும் வேதத்தின் உட்பொருளை அறிந்து கொள்ள வேண்டும் என்று ரிஷிகளும் முனிவர்களும் விழைந்தனர். ஆகவே, இதிஹாச புராணங்களை இயற்றினர்.

உதாரணமாக, தைத்தரீய உபனிடத்தில் குருவானவர் கல்வி முடிந்து வெளி உலகுக்கு செல்லும் சீடர்களுக்கு அறிவுரை கூறும் முதல் பகுதி “சிக்ஷா வல்லி”. ஆதில் ஒரு இடத்தில் “सत्यम् वद”  “सत्यात् न् प्रमतितव्यम्”. என்று சொல்கிறார். இதன் பொருள் “ உண்மை பேசு”. “உண்மையில் இருந்து வழுவாமல் இரு”. இதை உலகுக்கு உணர்த்த, வ்யாச பகவான் மஹாபாரத இதிஹாசத்தில் ஹரிசந்த்ர கதையின் வாயிலாக நம் அனைவருக்கும் உணர்த்துகிறார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், எல்லா புராணங்களும், இதிஹாசங்களும் வேதத்தை ஒட்டியே அமைந்துள்ளன.

அப்படிப்பட்ட இதிஹாசங்களுள் ஒன்றான இராமயணத்தில் இராமன் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுக்கும்போது இவ்வாறாக சொல்கிறார்.

सकृतेव प्रन्नाय तवास्मीतिच याचते ! अभयम् सर्व भूतेभ्यो ददामेतत् व्रतम् मम !!

“எந்த ஒரு ஜீவன் “நான் உன்னுடயவனாக இருக்கிறேன்” என்று என்னிடம் சரண் அடைகிறனோ, அந்த ஜீவனுக்கு நான் உடனடியாக, அபயம் அளிக்கிறேன். இது என்னுடய வ்ரதம்” என்று ஶ்ரீ இராமசந்த்ர மூர்த்தி கூறுகிறார்.. இதுவும், கீதையின் சார ஸ்லோகம் போல உள்ளது. ஆகவே, வேதத்தின் ஒரு முக்ய கருத்து, இறைவனிடம் சரண் அடைவதே.

வைணவ சம்ப்ரதாயதில் பெரியவர்களை உ.வே என்று அழைப்பார்கள். இதன் பொருள் “உபய வேதாந்தி”. அதாவது, இரண்டு வேதாந்தங்களையும் அறிந்தவர். வட மொழி வேதாந்தம் (உபனிஷதங்கள்) மற்றும் தமிழ் வேதாந்தங்கள் கற்றவர்கள். ஆழ்வார்கள் இயற்றிய திவ்யப்ரபந்தங்கள் தமிழ் வேதாந்தங்கள் ஆகும். பன்னிரண்டு ஆழ்வார்கள் நாலாயிரம் பாடல்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் பல்வேறு காலத்தில் தோன்றியவர்கள். ஆனால் மேலே கூறிய, கீதையின் சாரத்தை தெள்ளத்தெளிவாக சொல்லுகிறார்கள். 1) ஶ்ரீமந் நாரயணனே பர தத்வம்.2) அவனிடம் பக்தி செலுத்துவதே நம் கடன். 3) மோக்ஷத்தை அடைவது நம் குறிக்கொள். அதை தருவதும் அவனே.

இந்த பன்னிரெண்டு ஆழ்வார்களிலே பெண் ஆழ்வாராக இருப்பவர் கோதையாகிய நம் ஆண்டாள். இவருடய இயற்பெயர் கோதா. வடமொழியிலே “கோதா” என்றால் பூமியால் கொடுக்கப்பட்டவள் என்று பொருள். இந்த கோதா நாச்சியார் அயோனி ஜன்மத்தவர். கர்பவாசம் செய்யாதவர். பெரியாழ்வாரால் நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டவள். இவள் பூமி தேவியின் அம்சமாக பிறந்தவள் என்று கூறுவர். ஶ்ரீ வேதாந்த தேசிகன் தம்முடய “கோதா ஸ்துதி “ என்ற க்ரந்தத்திலே முதல் ஸ்லோகத்தில் கோதா தேவி சாக்ஷாத் பூமி பிராட்டி என்று சொல்கிறார்.

“साक्षात् क्षमाम् करुणया कमलाविव अन्याम् ! गोदाम् अनन्य शरणम् शरणम् प्र्पद्ये !!

வராஹ புராணத்தில் பகவான் வராஹ உருவம் எடுத்து பூமி தேவியை ஹிரண்யாக்ஷனிடம் இருந்து காப்பாற்றி பூமி பிராட்டிக்கு உபதேசம் செய்தார். பூமி தேவி கோதாவாகத் தோன்றி மக்களுக்கு 143 பாசுரங்கள் கொடுத்தார். அந்த நாச்சியார் திருமொழியிலே முக்யமானது திருப்பாவை. என்ற முப்பது பாசுரங்கள். எம்பெருமானார் ஶ்ரீ ராமானுஜர் இந்த முப்பது பாசுரங்களை எப்போதும் அனுசந்தானம் செய்து வந்ததனால் அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பார்கள்.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதப்பிரான் பட்டர் தென்கலை ஆசார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகளின் பேரன் ஆவார். அவர் ஆண்டாளுக்கு “வாழி திருநாமம்” பாடியுள்ளார். அது மட்டுமல்லாமல், ஆண்டாள் பிறந்த ஶ்ரீ வில்லிபுத்தூரையும் மற்றும் திருப்பாவையையும் உயர்வாகப் பாடி உள்ளார். திருப்பாவையைப் பற்றி கூறும்போது,

“வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐந்தும்
ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு”

என்று சொல்கிறார். இந்த முப்பது பாசுரமும் வேதம் அனைத்துக்கும் வித்து. நமக்கு நியாயமான ஒரு ஐயம் தோன்றுகிறது. “வேதம் அனாதி காலத்தில் இருந்து உள்ளது. திருப்பாவை இந்த யுகத்தில் இயற்றப்பட்டது. அப்படி இருக்க, அது எப்படி வேதத்துக்கு விதை ஆக முடியும்?”.

திருப்பாவைதான் வேதத்துக்கு காரணம் என்பது இதன் பொருள் அல்ல.

விதை சூக்ஷ்மமாக மரம், கிளை, பூ, பழம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொண்டு மரதின் சாரமாக உள்ளது. அதே போல, திருப்பாவை, வேதத்தின் சாரமாகவே உள்ளது. இது எப்படி என்பதை கீழே பார்ப்போம்.

  1. நாம், வேதத்தின் சாரமான கீதையில், பரத்வம் ஶ்ரீமன் நாரயணன் (நான்) என்று கண்ணன் சொன்னதை மேலே பார்த்தோம். அதை கண்ணன் ஏழாவது அத்யாயத்திலே கூறினான். அனால் கோதா நாச்சியாரோ முதல் பாசுரத்திலேயே, “நாரயணனே நமக்கே பறை தருவான்” என்று ஏகாரத்துடன் பரத்வத்தை நிர்ணயம் செய்கிறாள். கண்ணனே நாரயணன் என்பதையும், முதலில் உள்ள விசேஷணங்களால் நந்தகோபன் குமரன், யசோதை இளம் சிங்கம், போன்ற சொற்களால் விளக்குகிறாள். ஶ்ரீமத் பாகவதமும் “कृष्णस्तु भगवान् स्वयम्” அதாவது கண்ணன் ஶ்ரீமன் நாராயணனே என்று அறுதியிட்டு சொல்கிறது.
  2. அவனை சரண் அடைவதே நாம் செய்யவெண்டியது. (கீதை ஸ்லோகம் 7-14 மற்றும் 18-66). ஆண்டாள், 24 வது பாசுரத்திலே, “அன்றி இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி. சென்று எங்கும் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி” என்று, பகவான் திருவடிகளில் சரண் அடைகிறாள்.
  3. அடையவேண்டிய லக்ஷியம் மோக்ஷம்; மோக்ஷத்தை அளிப்பவன் ஶ்ரீமன் நாராயணன். முதல் பாசுரத்திலேயெ ஆண்டாள், “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று சொல்கிறாள். இதில் “பறை” என்ற சொல், நோன்புக்கு தேவையான இசைக்கருவி ஆகும். அனால் இதன் உள்ளர்த்தம் “ மோக்ஷம்”. ஆண்டாள் “நாரயண” நாமத்தை மூன்று பாசுரங்களில் உபயோகித்துள்ளாள். முதல் பாசுரம், ஏழாம் பசுரம் மற்றும் பத்தாம் பாசுரம். இதில் முதல் பாசுரம் மற்றும் பத்தாம் பாசுரத்தில், “நாராயண” நாமம் வரும் இடத்தில் “பறை” என்ற சொல்லையும் பயன்படுத்தியுள்ளாள். ஆகவே “மோக்ஷம் தருபவன் நாராயணணே” என்று தெள்ளத்தெளிவாக உரைக்கின்றாள்.
  4. வைணவ சித்தாந்த்திலே மோக்ஷம் என்பது ஶ்ரீ வைகுண்டத்தை அடைந்து பகவானுக்கு தொண்டு புரிவதே ஆகும். இதை ஆண்டாள், இருபத்தொன்பதாவது பாசுரதின் இறுதியில் பகவத் கைங்கர்யத்தை விழைகிறாள் “உனக்கே நாம் ஆட்செய்வோம்”.

வேதங்கள் பல்லயிரக்கணக்கான மந்த்ரங்கள் மூலமாகக் கூறிய கருத்துக்களை, கண்ணன், பல நுறு ஸ்லோகங்களில் சொன்னார். அதை மேலும் சுருக்கி கோதா நாச்சியார் முப்பது பாசுரங்களில் திரட்டி கொடுத்தாள். ஆகவே வேதம் அனைத்தும் மரம் என்றால் திருப்பாவை, விதை ஆகும். அது மட்டுமல்லாமல் வேதங்கள் (மறை) மறைமுகமாக கூறியவற்றை உள்ளங்கை நெல்லிக்கனியாக உரைத்தாள் ஆண்டாள். ஆகவே, தமிழ் கற்ற நாம் அனைவரும் திருப்பாவை கற்று அதன் பொருளை அறிந்து பிறவிப்பயனை அடைவோமாக. அவ்வாறு செய்யாவிட்டால் வேதப்பிரான் பட்டர் கூறியதுபோல்,” கோதை தமிழ் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு”; அதாவது நாம் பூமிக்கு பாரமாகிவிடுவோம்!

~ ராமபத்ரன்

~ படங்கள் உதவி – Flickr, Pinterest – நன்றி!

Leave a Comment